சுவிட்சர்லாந்தின் கிராபூண்டென்
மாநிலத்தில் மலைக்காடுகளில் திரியும் ஒரு கரடி (brown bear) ஊருக்குள் வந்து தொல்லை
தருவதால் அதைப் பிடிக்க வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
M13 என்று பெயரிடப்பட்ட இந்தக் காட்டுக் கரடி சுவிஸ் - இத்தாலி எல்லையோரத்துக்
கிராமமான போஸ்கியாவோ அருகிலுள்ள ஒரு மரக்குடிலுடன் இணைந்த தொழுவத்துக்குள்
நுழைந்தது. அந்தக் குடிலின் கண்ணாடிச் ஜன்னலை அடித்து உடைத்தது. அங்கு ஓரமாகக் கொட்டப்பட்டிருந்த பழைய உருளைக்கிழங்குகளையும் பழைய ரொட்டிகளையும் தின்று தீர்ந்தது. இது தொடர்பாக மரக்குடிலின் உரிமையாளர் ஃபெடெல் ஃபோரெர், M13 எல்லாவற்றையும் தோண்டிப் போட்டுவிட்டது. என் தண்ணீர் குழாயை உடைத்துவிட்டது, என் ஜெனரேட்டரை நொறுக்கிவிட்டது, வேக்குவம் கிளீனரை பிய்த்தெறிந்துவிட்டது என்று கூறி வருந்தினார். 36 மணிநேரம் இந்தக் கரடி இந்த வீட்டில் இருந்திருக்கிறது. ஒரு முறை கரடிக்கு மனித சகவாசம் கிடைத்துவிட்டால், அது ஆபத்தான விலங்காகவே கருதப்படும். ஏனென்றால் அது திரும்பத் திரும்ப வரத் தொடங்கும். ஒரு காலத்தில் சுவிட்சர்லாந்து காடுகளில் ஏராளமாக இருந்த கரடி இனம் வேட்டையாடப்பட்டு மறைந்து விடும் நிலைக்கு வந்துவிட்டது. பின்பு வேட்டை தடுக்கப்பட்டு மீண்டும் அந்த இனம் புத்துயிர் பெற்றது. டிரெண்ட்டினோ வனவிலங்குப் பூங்காவில் பராமரிக்கப்பட்ட ஒரு கரடி இத்தாலி எல்லையோர கிராமம் ஒன்றில் கடந்த 2005ம் ஆண்டில் சுற்றித் திரிந்தது. அதன்பின்பு அவ்வப்போது ஒன்றிரண்டு முறை கரடி ஊருக்குள் வருவதும் தொல்லை கொடுப்பதும் பிடிபடுவதும் சில சமயம் சுட்டுக் கொல்லப்படுவதும் உண்டு. கடந்த 2008 ஏப்ரலில் JJ3 என்று குறிக்கப்பட்ட ஒரு கரடியை வனத்துறையினர் சுட்டுக் கொல்ல நேரிட்டது. கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த கூட்டத்தில் பொஸ்கிவோ நகரத்து அதிகாரிகளும் மத்தியக் கூட்டரசின் அதிகாரிகளும் மாநில அரசின் அதிகாரிகளும் கலந்து பேசினர். இந்த M13 காட்டுக் கரடியையும் சுட்டுக் கொல்வதா என்று விவாதித்தனர். கரடிக்கு மயக்க மருந்து கொடுத்து காட்டில் கொண்டு போய் விட்டுவிடலாமா என்று ஆலோசித்தனர். கடந்த வருடம் முதல் இந்தக் கரடி பெருந்தொல்லை கொடுத்து வருகிறது. பள்ளிக்கூடத்துக்குள் போய் மரத்தில் ஏறித் தேனடையைச் சுவைத்தது. உடனே பள்ளிவளாகத்தைச் சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டது. இரண்டு முறை கிராமத்திற்குள் வந்து ஆடுகளை அடித்துத் தின்றுவிட்டது. பொதுவாக, இது கரடிகளின் பனி உறக்கக் காலமாகும் ஆனால் M13க்கு இனி பனி உறக்கமா நிரந்தர உறக்கமா என்பது இன்னும் முடிவாகவில்லை |
November 19, 2012
வீட்டுக்குள் புகுந்த காட்டுக்கரடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment