உடல் நலம் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ள சிவ சேனா தலைவர் பால் தாக்கரே இறந்துவிட்டார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் டுவிட்டரில் தெரிவித்தார். பின்னர் தனது கூற்றை வாபஸ் பெற்றதோடு தாக்கரே குடும்பத்தாரிடம் மன்னிப்பும் கேட்டார்.
கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரேவின் உடல் நிலை நேற்று முன்தினம் இரவு மோசமானது. அதைத் தொடர்ந்து அவரது உடல் நிலை நேற்று முழுவதும் கவலைக்கிடமாக இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த சிவ சேனா தொண்டர்கள் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தாக்கரேவின் வீட்டுக்கு முன்பு குவிந்துவிட்டனர். இதனால் தாக்கரேவின் வீட்டுக்கு முன்பு போலீசார் குவிக்கப்பட்டதுடன் மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் டுவிட்டரில் பால் தாக்கரே இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது டுவீட்
பாலா சாஹிப் மரணச் செய்தி கேட்டு கவலையடைந்தேன். அவரது அரசியல் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நான் அவரது அறிவு, துணிச்சலை பார்த்து வியக்கிறேன். உத்தவ் மற்றும் தாக்கரே குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதைப் பார்த்த சிவ சேனா தொண்டர்கள் கொதித்துவிட்டனர். அதன் பிறகு தாக்கரே இறந்துவிட்டதாக தான் டுவீட் செய்ததற்காக அவர் தாக்கரே குடும்பத்தாரிடம் டுவிட்டர் மூலம் மன்னிப்பு கேட்டார்.
மன்னிப்பு கேட்ட டுவீட்
தாக்கரே குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பால் தாக்கரே விரைவில் குணமாக பிரார்த்திக்கிறேன்.
இந்நிலையில் பால் தாக்கரேவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சிவ சேனா கட்சி இன்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment