siruppiddy nilavarai.com navarkiri.net

September 13, 2012

மிக எளிமையான முறையில் அனுசரிக்கப்பட்ட இரட்டை கோபுர நினைவு தினம்

By.Rajah,நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலின் 11வது ஆண்டு நினைவு தினம் நேற்று மிக எளிமையான முறையில் அனுசரிக்கப்பட்டது. கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்காவின் வாஷிங்டனில் இருந்து நான்கு விமானங்களை கடத்திய அல்கொய்தா தற்கொலைப் படை பயங்கரவாதிகள், நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் இராணுவ தலைமையகத்தின் மீது விமானங்களை மோத செய்தனர்.
இதில் உலக வர்த்தக மையமாக செயல்பட்ட இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதுடன், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இந்த துயர சம்பவத்தின் 11வது ஆண்டு நினைவு தினம் அமெரிக்கா முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது.
நியூயார்க் நகரின் கிரவுண்ட் ஜீரோ மற்றும் வாஷிங்டனில் இறந்தவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிரவுண்ட் ஜீரோ பகுதியில் இறந்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு, மத சம்பிரதாயப்படி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முக்கிய பிரமுகர்கள் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றனர்.
உறவினர்களைப் பறிகொடுத்தவர்கள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர். நாடு முழுவதும் நடந்த நினைவு நிகழ்ச்சிகளில், அரசு அதிகாரிகள் அதிகம் பங்கேற்கவில்லை.
வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் சிறிது நேரம் மவுனம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதுபற்றி வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவம் நடந்த 11வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஒபாமா ஆலோசனை நடத்தினார்.
கடந்த ஒரு மாதமாக உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்துவது பற்றி ஜனாதிபதிக்கான உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பிரெனன் பலமுறை கூட்டங்கள் நடத்தி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அமெரிக்க மக்களை பாதுகாக்க அனைத்து துறைகளும், பாதுகாப்பு அமைப்புகளும் ஈடுபடவேண்டும் என்று ஜனாதிபதி ஒபாமா கேட்டுக் கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment