siruppiddy nilavarai.com navarkiri.net

September 27, 2012

சுந்தரபாண்டியன்(வீடியோ இணைப்பு)

27.09.2012.By.Rajah.(வீடியோ.புகைபடங்கள். இணைப்பு).சுப்பிரமணியபுரம்’, ‘நாடோடிகள்’ படவரிசையில் நண்பர்களுக்காக எதுவும் செய்யத் துணியும் ஹீரோவின் கதைதான் ‘சுந்தரபாண்டியன்’.
நண்பனின் காதலுக்காக தான் ஏற்கனவே பின்னால் சுற்றிய கதாநாயகி லட்சுமி மேனனிடம் தூது போகிறார் சசிகுமார்.
போன இடத்தில் லட்சுமி மேனன் சசிகுமாரை இப்போது விரும்புவதாக கூறுகிறாள். சசிகுமாரும் அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார். இன்னொரு பக்கம் அப்புக்குட்டி லட்சுமிமேனனை ஒருதலையாக காதலித்து வருகிறார். இதனால் அப்புக்குட்டியுடன் ஏற்படும் மோதலில், தவறுதலாக அப்புக்குட்டி இறந்துவிட, கொலைப்பழியை சசிகுமார் ஏற்றுக் கொள்கிறார்.
இந்நிலையில், சசிகுமாரின் காதல் விவகாரம் லட்சுமி மேனனின் வீட்டுக்கு தெரிந்துவிட, அவளது முறைப் பையனான விஜய் சேதுபதிக்கு திருமணம் முடித்துவைக்க ஏற்பாடு நடக்கிறது. ஆனால், லட்சுமி மேனன் முறைப் பையனை மணமுடிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
சசிகுமாரின் ஆழமான காதலை புரிந்து கொண்ட லட்சுமி மேனனின் அப்பா இவர்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். இதனால் கோபமடைந்த லட்சுமி மேனனின் முறைப்பையனும், இறந்து போன அப்புக்குட்டியின் நண்பனும் சேர்ந்து சசிகுமாரை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்கள். இவர்களோடு சசிகுமாரின் நண்பனும் சேர்ந்து கொள்கிறான்.
இவ்வளவையும் சமாளித்து ஹீரோவும் ஹீரோயினும் இணைந்தார்களா என்பதே படத்தின் மீதிக் கதை.
சசிகுமார் இந்தப் படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். முதல் பாதியில் ‘புரோட்டோ’ சூரியோடு இவர் செய்யும் கலாட்டாக்கள் நம் வயிற்றை பதம் பார்க்கின்றன. ரஜினி ரசிகராக பஸ்சில் இவர் செய்யும் அலப்பறை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஹீரோயின் ‘கும்கி’ லஷ்மி நாயர், பக்கத்து வீட்டு பெண்ணைப் போன்ற அழகு. தமிழ் சினிமாவுக்கு கிராமத்துப் பெண்ணாக, நன்றாக நடிக்கத் தெரிந்த மற்றொரு ஹீரோயின் கிடைத்திருக்கிறார். பஸ்சில் தன் பின்னால் சுற்றும் சசிகுமாரை முறைப்பதில், தன் பார்வையிலே பேசுகிற தொனி அருமை.
படத்தில் இடைவேளை வரை சூரி கலகலப்பூட்டியிருக்கிறார். இடைவேளைக்கு பிறகு திரைக்கதையின் தேவை கருதி இவரின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது.
ஹீரோயின் பின்னாலேயே சுற்றும் ‘ரோமியோ’வாக அப்புக்குட்டி. இவர் வலிந்து வலிந்து தனது மேனரிசம்களை காட்டி ஹீரோயினை வளைக்க நினைப்பது கலகலப்பூட்டும் நகைச்சுவை.
விஜய் சேதுபதிக்கு இப்படத்தில் சாதாரண கதாபாத்திரம் என்றாலும், கதைக்கு பலம் கூட்டும் கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.
சசிகுமாரின் அப்பாவாக வரும் நரேன், ஹீரோயினின் அப்பாவாக வரும் தென்னவன், சசிகுமாரின் நண்பன் இனிகோ பிரபாகரன், அப்புக்குட்டியின் நண்பன் சௌந்தர ராஜா ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் படத்தின் பாடல்கள் சுமார் ரகம்தான். ஆனால் பின்னணி இசை படத்தை வேகமாக நகர்த்த உதவியிருக்கிறது. கதை நடக்கும் உசிலம்பட்டி ஏரியாவை பிரேம்குமாரின் ஒளிப்பதிவு நேரில் பார்த்தது போன்ற உணர்வை நமக்கு தருகிறது. பஸ்ஸில் பயணம் செய்யும் காட்சிகளிலும், பைக்கில் பயணம் செய்யும் காட்சிகளிலும் ஒளிப்பதிவு அருமை.
படத்தின் ஆரம்பத்திலேயே உசிலம்பட்டி ஏரியா பற்றிய ஒரு சிறு தொகுப்பை ரசிகர்களுக்கு யதார்த்தம் தவறாமல் பதிவு செய்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். இடைவேளைவரை சினிமாத்தனம் இல்லாமல் கலகலப்பாக கதை நகர்கிறது. ஆனால் இடைவேளைக்குப்பின் அது கொஞ்சம் தலைதூக்குகிறது. இருந்தாலும், முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் அதனை பதிவு செய்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் சசிகுமாரின் ‘சுந்தரபாண்டியன்’ குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்.

நடிகர் : சசிகுமார்,
விஜய் சேதுபதி
நடிகை : லஷ்மி மேனன்
இயக்குனர் : எஸ்.ஆர்.பிரபாகரன்
இசை : என்.ஆர்.ரகுநந்தன்
ஓளிப்பதிவு : பிரேம்குமார்

No comments:

Post a Comment