சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு இந்திய அணி முதன் முறையாக முன்னேறி சாதித்தது. நேற்று நடந்த காலிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், ஆண்களுக்கான 34வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி 6 ஆண்டுக்குப் பின் இத்தொடரில் விளையாடுகிறது.
நேற்று நடந்த காலிறுதியில், ஏ பிரிவில் முதல் இடம் பெற்ற இந்திய அணி, பி பிரிவில் கடைசி இடம் பிடித்த பெல்ஜியத்தை சந்தித்தது. துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு, 13வது நிமிடத்தில் நிதின் திம்மையா, ஒரு பீல்டு கோல் அடிக்க, முதல் பாதியின் முடிவில், இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில், ஸ்கோரை சமன் செய்ய பெல்ஜியம் வீரர்கள், கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களுக்கு கிடைத்த 6 பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் வீணடித்தனர்.
முடிவில், இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. தவிர, கடந்த ஆண்டு நடந்த சாம்பியன் சாலஞ்ச் பைனல், லண்டன் ஒலிம்பிக் லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு, இந்தியா நேற்று பழி தீர்த்தது.
நேற்று நடந்த மற்ற காலிறுதி போட்டிகளில் பாகிஸ்தான், ஜெர்மனியை 2-1 என, வீழ்த்தியது. நெதர்லாந்து, நியூசிலாந்தை (2-0) வென்றது. இங்கிலாந்தை 2-0 என, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.
இந்தியா-ஆஸி.
நாளை நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
30 ஆண்டுகளுக்கு பின்...
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி 1982ல் வெண்கலம் வென்றது. இதன் பின், 1983, 1996, 2002, 2003, 2004 என, ஐந்துமுறை இந்திய அணி நான்காவது இடம் பெற்றது. தற்போது முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு, 30 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் பதக்கம் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment