By.Rajah..பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஆம்லா(90), காலிஸ்(84) தூணாக நிற்க, தென் ஆப்ரிக்க அணி வலுவான அடித்தளம் அமைத்தது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு எடுபடவில்லை.
ஆஸ்திரேலியா சென்றுள்ள தென்ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற தென்ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித், "பேட்டிங்' தேர்வு செய்தார்.
பீட்டர்சன் அரைசதம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு ஸ்மித் (10) ஏமாற்றினார். பின் ஆம்லா, ஆல்விரோ பீட்டர்சன் சேர்ந்து நிதானமாக ஆடினர். அரைசதம் கடந்த பீட்டர்சன்(64), நாதன் லியான் "சுழலில்' சிக்கினார். ஆம்லாவை மனரீதியாக கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா வகுத்த திட்டம் எதுவும் பலன் அளிக்கவில்லை. இவர், டெஸ்ட் அரங்கில் 24வது அரைசதம் கடந்தார். மறுமுனையில் நல்ல "கம்பெனி' கொடுத்த காலிஸ், 56வது அரைசதத்தை பதிவுசெய்தார். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால், முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்தது. ஆம்லா (90), காலிஸ் (84) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் பட்டின்சன், லியான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
கைவசம் விக்கெட்டுகள் இருப்பதால், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி ரன் மழை பொழிந்து, வலுவான இலக்கை எட்டலாம்.
5,000 ரன்கள்
நேற்று நடந்த முதல் நாள் ஆட்டத்தில் 90 ரன்கள் விளாசிய ஆம்லா, டெஸ்ட் அரங்கில் 5000 ரன்கள் எட்டிய ஏழாவது தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமை பெற்றார்.
டுமினி "அவுட்'
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தென் ஆப்ரிக்க வீரர் டுமினி, இடது குதிகால் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக விலகினார். முதல் நாள் ஆட்டம் முடிந்த பின் நடந்த பயிற்சியின் போது கீழே விழுந்தார். உடனடியாக "எக்ஸ்ரே' எடுத்து பார்த்த போது இடது குதிகாலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் இவர் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவருக்கு இன்று ஆப்பரேஷன் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இவருக்கு பதிலாக, 12வது வீரராக உள்ள டுபிளசி களமிறங்குவார். இவருக்கு மாற்று வீரரை தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு விரைவில் அறிவிக்கும்


No comments:
Post a Comment